Monday, January 31, 2011

3 இடியட்ஸிலிருந்து சூர்யா நீக்கப்பட்டது ஏன்?

3 இடியட்ஸ் படத்தை விட, அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஹீரோக்களை ஒப்பந்தம் செய்தது சுவாரஸ்யமான கதை.

இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் உரிமையை ஜெமினி நிறுவனம் வாங்கியபோதே, அதன் ஹீரோ விஜய்தான் என்று முடிவு செய்திருந்தனர். 6 மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து விஜய் பேட்டியும் அளித்திருந்தார். விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. சிம்புவும் நடிக்க சம்மதித்திருந்தார்.

ஆனால் இடையில் ஏகப்பட்ட மாறுதல்கள். எந்திரன் ரிலீஸானதும், ஷங்கரிடம் இந்த புராஜெக்டை கொண்டுபோனார்கள் ஜெமினி நிறுவனத்தினர் (எந்திரன் வெளியீட்டாளர்களும் ஜெமினிதான்!). அவரும் இயக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட வேண்டும் என 'முக்கியமான இடத்திலிருந்து' தயாரிப்பாளருக்கு பிரஷர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதைப் பெரிதாக்காமல் அமுக்கிவிட்ட மீடியா, ஷங்கருக்கும் விஜய்க்கும் பிரச்சினை என்றும், விஜய் கெட்டப் மாற ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கிளப்பிவிட்டன. இத்தனைக்கும் வேலாயுதம் படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதே, 3 இடியட்ஸுக்காக கெட்டப் மாற்றிக் கொண்டிருந்தார் விஜய் என்பதை ஒருவரும் சொல்லவில்லை!

ஒரு கெட்ட தினத்தில், விஜய் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜெமினி. ஆனால் ஷங்கர் வழக்கம்போல மவுனம் சாதித்தார்.

அதன் பிறகு இந்தப் படம் குறித்து யோசிக்கும் நிலையில் விஜய் இல்லை. காவலன் அவரை அந்தப் பாடு படுத்தியது. அதை வெளியிட்டு முடித்து, பாக்ஸ் ஆபீஸில் படம் சூப்பர் ஹிட் என ரிசல்ட் வரும் வரை விஜய்யால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

இதற்கு நடுவில் 3 இடியட்ஸில் நடந்த சமாச்சாரங்கள் ஒரு மெகா சீரியலுக்கு சமமானது.

விஜய் நடிக்கவில்லை, அவருக்குப் பதில் சூர்யா நடிக்கிறார் என்று ஜெமினி நிறுவனம் அறிவித்ததிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது.

பெரும் வாய்ப்பு, பெரிய இயக்குநர், பெரிய நிறுவனம் எல்லாமே தன்னை மிக எளிதாகத் தேடி வந்ததால், சூர்யா தன் பங்குக்கு பெரிதாக பிகு பண்ண ஆரம்பித்தார் என்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கருக்கு எக்கச்சக்க கண்டிஷன்களைப் போட்டார். தெலுங்கிலும் நான்தான் ஹீரோவாக நடிப்பேன் என்பது அவரது முதல் கண்டிஷன். மகேஷ்பாபு அங்கே விலகிக் கொண்டதால், இருக்கட்டும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். ஷங்கர் மவுனம் காத்தார்.

அடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக தமிழில் ரூ 12 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா (கிட்டத்தட்ட ரூ 10 கோடி இதன் மதிப்பு). அல்லது ஏதாவது ஒரு பதிப்பின் வெளியீட்டு உரிமையை தனது உறவினரின் நிறுவனத்துக்கு தரவேண்டும் என்றாராம். ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்!

அடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்... மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது உதயநிதியின் 'ஏழாம் அறிவு', கேவி ஆனந்தின் 'மாற்றான்' படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்!

ஷூட்டிங்கும் முன்பே கண்ணைக் கட்டுதே என்று புலம்ப ஆரம்பித்தது தயாரிப்பாளர் தரப்பு.

ஆனால் ஷங்கர் மிகத் தெளிவாக இருந்தார். 'மெயின் ஹீரோ யார் என்பதில் ஒரு முடிவுக்கு வாருங்கள், அதுவரை சும்மா இருக்க முடியாது' என்று கூறிவிட்டு இரண்டாவது ஹீரோ ஜீவா, மூன்றாவது ஹீரோ ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜூடன் ஊட்டிக்குப் போய் ஷூட்டிங்கையே தொடங்கிவிட்டார் கடந்த ஜனவரி 25-ம் தேதி.

சூர்யா வேண்டாம் என்று முடிவு செய்த ஜெமினி, மீண்டும் விஜய்யுடம் பேச முடியுமா என இயக்குநர் ஷங்கரைக் கேட்க, அதற்காகவே காத்திருந்த மாதிரி சட்டென்று விஜய்யைத் தொடர்பு கொண்டாராம் ஷங்கர்.

காவலன் வெற்றி என்ற திருப்தியிலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசியல் இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்த விஜய், எடுத்த எடுப்பிலேயே எந்த நிபந்தனையுமில்லாமல் சம்மதம் சொல்லியிருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் எடுத்து முடிந்ததும் படப்பிடிப்புக்கு ஆஜராகிவிடுவதாகக் கூறிவிட்டார். அதன்படி பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஒருவழியாக 3 இடியட்ஸ் குழப்பத்துக்கு ஒரு நல்ல க்ளைமாக்ஸ் கிடைத்துவிட்டதாக கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

படத்துக்கு இப்போதைய பெயர் மூவர். விரைவில் இந்தப் பெயர் மாறக்கூடும்!

எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்துக்கு மொத்த செலவு ரூ 132 கோடி என்றும், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ 179 கோடி என்றும், சேட்டிலைட் உரிமை மூலம் ரூ 15 கோடி கிடைத்திருப்பதாகவும் சன் நெட்வொர்க் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு அறிக்கையை மும்பை பங்கு வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது சன் நெட்வொர்க் நிறுவனம். அதன்படி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான சன் டிவியின் நிகர லாபம் 48 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சன் லாபம் ரூ 151.94 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ 225.49 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 50.47 சதவீதம் உயர்ந்துள்ளது.

மூன்றாம் காலாண்டின் சன் நெட்வொர்க்கின் துணை நிறுவனம் சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினி நடித்த எந்திரன் படம் மூலம் 179 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக செய்யப்பட்ட மொத்த செலவு ரூ 132 கோடி என்று சன் டிவி கூறியுள்ளது.

எந்திரன் செலவு ரூ 182 கோடி என்றும், வருவாய் ரூ 400 கோடி என்றும் இதுவரை வந்த பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவித்தன. வெளிநாடுகளில் மட்டும் ரூ 70 கோடி வசூலித்ததாக படத்தை வெளியிட்ட ஈராஸ் - அய்ங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

காதலர் தினத்திற்கு 2 படம்

காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாதத்தில் 2 திரைப்படங்கள் காதலர்களை மகிழ்விக்க வருகிறது.

தீபாவளி, பொங்கலுக்கு புதிய திரைப்படங்கள் வருவதைப் போல இப்போது காதலர் தினத்தன்றும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, விண்ணைத் தாண்டி வருவாயா வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2009ம் ஆண்டு சிவா மனசுக்குள் சக்தி படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த வரிசையில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகின. ஒன்று ஆனந்த்தின் கோ. இன்னொன்று, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள எங்கேயும் காதல்.

இரு படங்களுக்கும் இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ். இரு படங்களின் பாடல்களும் ஏற்கனவே அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விட்டன. எங்கேயும் காதல் படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

காதலர் தினத்தன்று வெளியாகும் இந்த இரு படங்களில் யார் காதலர்களுடைய பெருவாரியான ஆதரவுகளைப் பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, January 27, 2011

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியையும் விட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1, 800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது



பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர். அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர் குசும்புக்கார ஹேக்கர்கள்.

சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!

சன் டிவியின் மெகா விளம்பரங்கள் கூட தனுஷின் ஆடுகளத்தைக் காப்பாற்ற முடியவில்லை. நகரப் பகுதிகளில் வசூல் சுமார்... கிராமம் சார்ந்த திரையரங்குகள் பலவற்றில் படத்தை தூக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் தனது அடுத்த வெளியீடாக ரஜினி பட ரீமேக்கான 'மாப்பிள்ளையைக் களமிறக்கத் தயாராகிறார் தனுஷ். இதுவும் சன் பிக்சர்ஸ் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்குப் பிறகு ஹரியின் வேங்கை, சுப்பிரமணியன் சிவாவின் சீடன், செல்வராகவனின் இரண்டாம் உலகம் என வரிசையாக உள்ளன தனுஷ் படங்கள்.

இதற்கிடையே, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் தந்த சிம்பு தேவனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போல இந்தப் படமும் பேண்டஸி கதைதானாம். இந்தப் படத்தைத் தயாரிக்க இரு பெரிய நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம்.

இன்னொரு பக்கம், வெற்றி மாறன் 2012-ல் தயாரிக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கிறாராம்.

காவலன் 'சூப்பர் ஹிட்'!

பொங்கலுக்கு வந்த படங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் தடைகளைத் தாண்டி சூப்பர் ஹிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விஜய் நடித்த காவலன்.

பொங்கலுக்கு காவலன் படம் வருமா? வராதா? என பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஒரு பக்கம் தியேட்டர்காரர்கள் பிரச்சினை செய்ய, மறுபக்கம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பின்வாங்க தட்டுத் தடுமாறி ரிலீஸ் செய்தனர் படத்தை.

ஆனால் இன்று படத்துக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்களே, படம் குறித்து பாஸிடிவாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டு வாரங்களாகும் நிலையில் படங்களின் வசூல் நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி விஜய்யின் காவலன்தான் இன்றைய தேதிக்கு முதலிடத்தில் உள்ளது. சென்னை போன்ற நகர்ப்புற திரையரங்குகளில் இப்போதும் ஓரளவுக்காவது ஆன்லைன் புக்கிங் இருப்பது காவலனுக்கு மட்டுமே. மற்ற படங்களைப் பொறுத்தவரை, காட்சி நேரத்தின் போதுதான் டிக்கெட் வாங்கவே வருகிறார்கள்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் காவலன் படம் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் என்ற நிலை. கிராமத்துப் பகுதிகளில் ரிலீசான பொங்கல் படங்களில் சிறுத்தையும், இளைஞனுக்கும் பெட்டிக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டன. ஆனால் காவலன் ஸ்டெடியாக உள்ளதாகவும், ஆடுகளம் இன்னும் சில தினங்கள் தாக்குப் பிடிக்கக் கூடும் என்றும் கோவை விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்

Wednesday, January 26, 2011

தெலுங்கில் ரீமேக்காகும் காவலன்-பெல்லம்கொண்டா சுரேஷிடம் உரிமை

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான பெல்லம்கொண்டா சுரேஷ் விஜய், அசின் நடித்துள்ள காவலன் படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார்.

காவலன் திலீப், நயன்தாரா நடித்த பாடிகார்ட் என்னும் மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். பாடிகார்ட் மற்றும் காவலன் படங்களை இயக்கியவர் சித்திக்.

காவலன் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக இல்லாத விஜய் படமாக இருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு. குறிப்பாக ரிப்பீட் ஆடியன்ஸ் வருகையால் படம் வெற்றிப் படமாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது காவலன் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதற்கான உரிமையை சுரேஷ் வாங்கியுள்ளார்.

படங்களை ரீமேக் செய்வதில் கில்லாடியான சுரேஷ் இன்னும் ஹீரோ, ஹீரோயினைத் தேர்வு செய்யவில்லை. இந்தப் படத்தையும் சித்திக் தான் இயக்குவாரா என்றும் தெரியவில்லை.

இதற்கிடையே, காவலன் வெற்றியைத் தொடர்ந்து பாடிகார்ட் படம் விரைவில் சல்மான் கானை வைத்து இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தையும் சித்திக் தான் இயக்குவார் என்றும் தெரிகிறது. அனேகமாக ஆசினே நாயகியாகவும் நடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் விருது-2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

ஆஸ்கர் விருது ஜூரம் தீவிரமாகியுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர், 2 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை அவர் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி சாதனை படைத்தார் ரஹ்மான். அவர் மட்டுமல்லாமல், குல்ஸார், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில், ரஹ்மான் இசையமைப்பில், டேனி பாயில் இயக்கியுள்ள 127 ஹவர்ஸ் திரைப்படம் பல்வேறு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் மட்டும் 2 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜினல் பாடல் (இஃப் ஐ ரைஸ்) ஆகிய இரு பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரையாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளுவாரா ரஹ்மான் என்ற எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், அதிகபட்சமாக தி கிங்க்ஸ் ஸ்பீச் படம் மொத்தம் 12 பிரிவுகளில் பரிந்துரையைப் பெற்றுள்ளது. ட்ரூ கிப்ட் படம் 10 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

83வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

140 தமிழ்ப் படங்களுக்கு மானியம்: ராம.நாராயணன் அறிவிப்பு

சென்னை: 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஆண்டுக்கு 35 படங்கள் வீதம் மொத்தம் 140 படங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளுக்கான மானிய தொகை வழங்கி, தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழக முதல்வர் [^] கருணாநிதி [^] க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் திரையுலகினரின் துன்பங்களை துடைத்து, இன்பம் சேர்க்கும் விதமாக, கடந்த 2007, 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு தமிழக அரசின் மானிய தொகைக்கான விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான விண்ணப்பத்தை சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் ராம.நாராயணன் கூறியிருக்கிறார்.

பாபர் மசூதி கதை... கைவிட்டார் கமல் [^] !

சர்ச்சைகளை படமாக்குவது கமலுக்கு பிடித்தமான விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளாகத் தொடரும் கலாட்டாக்களை நினைத்து இப்போது பின்வாங்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.

அதிலும் தனது மன்மதன் அம்பு பாடலுக்கு கிடைத்த 'மரியாதை' அவரை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது போலிருக்கிறது.

ஹேராம், விருமாண்டிக்குப் பிறகு தானே இயக்கப் போகும் தனது அடுத்த படத்தின் கதைக் களமாக கமல் தேர்வு செய்தது பாபர் மசூதி இடிப்பு சம்பவம் [^] மற்றும் அதன் பின் விளைவுகளைத்தான்.

ஆனால், சர்ச்சைகளைத் தவிர்க்க, இந்தக் கதையைப் படமாக்குவதைத் தவிர்த்தேன் என்று அவர் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கான கதை விவாதமெல்லாம் முடிந்த நிலையில், இப்படியொரு படம் [^] எடுத்தால் ஏற்படப் போகும் விவாதங்கள், விமர்சனங்கள் மற்றும் கலாட்டாக்களை நினைத்து கைவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கமல் கூறுகையில், "பாபர் மசூதி கதை பலத்த சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் அப்படம் எடுப்பதை கைவிட்டு விட்டேன். அதற்காக நான் பயந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை...", என்றார்.